வடகிழக்கு பருவமழை தற்போது சற்று குறைந்திருந்தாலும் ஜனவரி 10 வரை மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விடாத கனமழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. டிசம்பர் மாத இறுதி வாக்கில் மழை குறையத் தொடங்கிய நிலையில் தற்போது ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் மழை தொடர்ந்து வருகிறது. மேலும் பருவமழைக் காலம் இன்னும் முடிவடையவில்லை என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜனவரி 10 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்
6 மற்றும் 7ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலையும் காணப்படும்
8 மற்றும் 9ம் தேதிகளில் கடலோர தமிழக பகுதிகளின் ஒரு சில இடங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஜனவரி 10ம் தேதி கடலோர தமிழக பகுதிகளின் பெரும்பான்மையான இடங்களிலும், புதுவை, காரைக்கால் கடலோர பகுதிகளிலும், உள்தமிழக பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K