தினகரனுக்கு எதிராக பேசினால் பதவி காலி - ஜெயக்குமாரை எச்சரிக்கும் வெற்றிவேல்

புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:38 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக கருத்து கூறிவருவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.


 

 
இரண்டு மாதம் அமைதியாக இருப்பேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறிய கெடு வருகிற ஆகஸ்டு 4ம் தேதியோடு முடிவடைகிறது.  
 
எனவே, அதிமுகவில் தற்போது டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. வரும் 5-ஆம் தேதி கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தலைமை கழகத்துக்கு வர வேண்டும் என தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
அதைத் தொடர்ந்து, நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை நடந்தது. அதில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த ஜெயக்குமார் ‘கட்சியும் ஆட்சியும் எடப்பாடி கையில்தான் இருக்கிறது. இரண்டையும் அவரே இரண்டையும் வழிநடத்துவார்” எனக்கூறினார். 
 
இதன் மூலம் கட்சி நடவடிக்கையில் தினகரன் தலையிடுவதை தாங்கள் விரும்பவில்லை என்பதை அவர் கூறியிருந்தார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி என்பது சரி. ஆனால், கட்சியை வழிநடத்துவது சசிகலாவும், தினகரனும்தான். துணைப் பொதுச்செயலாளர் நினைத்தால் எதுவும் நடக்கும். கட்சி அலுவலகத்திற்கு போக யாருடைய தயவும் அவருக்கு தேவையில்லை. அவர் அங்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. 
 
இப்படியே தினகனுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தால் ஜெயக்குமாரின் பதவி பறிக்கப்படும். தன்னுடைய அடுத்த நடவடிக்கைகள் பற்றி தினகரன் அறிக்கை வெளியிடுவார்” என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்