தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பேர் பலியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், இன்று தூத்துக்குடியில் இரங்கல் அனுசரிக்க மக்கள் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பலர் இரங்கலை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “சொந்த நாட்டு மக்கள் மீது எதிரி நாட்டு ராணுவம் போல எடப்பாடி அரசு நடத்திய குண்டு வேட்டையின் சத்தம் இன்னமும் எதிரொலிக்கிறது. இந்த பழியை எடப்பாடி பழனிசாமி எத்தனை ஆண்டுகளானாலும் துடைக்க முடியாது, கடல் நீர் முழுவதையும் கொண்டு கழுவினாலும் அவர் கரங்களில் உள்ள ரத்தக்கறை போகாது” என்று சாடியுள்ளார்.
மேலும், துப்பாக்கி சூடு குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்னும் வெளிவராததை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் “இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22. தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது!” என்று கூறியுள்ளார்.