ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் அதிமுக அமைச்சர்: மழுப்பும் செல்லூர் ராஜூ!

வியாழன், 5 அக்டோபர் 2017 (09:07 IST)
மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பார் என ஆர்எஸ்எஸ் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 
 
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. தமிழக முதல்வராக ஜெயலலிதா இறந்தவரை இந்த ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர் இறந்த பின்னர் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியளித்தார். அப்போதே இது விமர்சிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது மதுரையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த உள்ளனர். ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்ட விஜயதசமி தினத்தில் மதுரையில் வரும் 8-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் அனிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் எனவும், அதை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பார் என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் அழைப்பிதழ் அடிக்கப்பட்டிருக்கிறது.
 
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அமைச்சர் துவக்கி வைப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட திராவிட கழகத்தினர் ஆர்எஸ்எஸின் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
 
மேலும் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் இந்த ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொள்வதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைப்பதாக நான் யாரிடமும் கூறவில்லை. என்னைக் கேட்காமலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வல நிகழ்ச்சியில் என்னுடைய பெயர் அச்சடிக்கப்பட்டுள்ளது என மழுப்பலாக பதில் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்