பரோலில் வரும் சசிகலாவை சந்திக்க உள்ள ஓ.எஸ்.மணியன்: ஆட்டம் காணும் எடப்பாடி கூடாரம்!
வியாழன், 5 அக்டோபர் 2017 (17:03 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிருப்தியில் இருப்பதாகவும், மீண்டும் தினகரனை அதிமுகவில் சேர்க்க ஓ.எஸ்.மணியன் திட்டமிட்டுள்ளதாகவும் நாம் முன்னரே கூறியிருந்தோம்.
அதற்கேற்ப இன்றோ, நாளை காலையோ பரோலில் வர உள்ள சசிகலாவை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்ததை அடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழுவில் சசிகலாவையும், தினகரனையும் நீக்கி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் சில அதிமுகவினர் தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என பேசி வருகின்றனர்.
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சமீபத்தில் தினகரனும், சசிகலாவும் விரைவில் தங்களுடன் சேருவார்கள் என கூறி தினகரனுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் இவர்களது கருத்து அவர்கள் தனிப்பட்ட கருத்து என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள கே.பி.முனுசாமி கூறினார்.
இந்நிலையில் மீண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்கள், தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், அதிமுக என்பது மாபெரும் இயக்கம். அதிமுக என்னும் தாய் கழகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தினகரன் உள்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என கூறினார்.
தினகரன் தானாக பிரிந்து சென்றிருந்தால், அவர் மீண்டும் அதிமுகவுக்கு வரலாம் என கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பொதுக்குழுவை கூட்டி இவர் இந்த கட்சிக்கு வேண்டாம் என நீக்கி வைத்துவிட்டு, தற்போது தினகரன் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியது எடப்பாடி அணியில் ஏற்பட்டுள்ள விரிசலையே காட்டியது.
இந்நிலையில் தற்போது பெங்களூர் சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வர உள்ள சசிகலாவை சந்திப்பேன் என கூறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஓ.எஸ்.மணியனின் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனையடுத்து மேலும் சில அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.