ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம்? ஜெயகுமார் கிளப்பிய சர்ச்சை!

திங்கள், 19 அக்டோபர் 2020 (15:42 IST)
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஜெயகுமாரின் கருத்து தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9 வது முறையாக காலநீட்டிப்பு கேட்டிருப்பதை விமர்சித்துள்ளார் உதயநிதி.  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்த போதும் இறந்த போதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். 
 
அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணை முதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெ.மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப் போகிறது என்பதே மக்களின் கேள்வி. 
 
ஆனால், ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9 வது முறையாக காலநீட்டிப்பு கேட்கிறது. சிறு பெட்டிகேஸில் கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெ. மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன? 
 
ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை. இவர்களை அடையாளம் காட்டிய ஜெ. மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காத போது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப் போகிறது? அடுத்த 6 மாதத்தில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெ. மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி என குறிப்பிட்டுள்ளார். 
 
இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பதை ஆறுமுகசாமி கமிஷன் விரைவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். ஜெயகுமாரின் இந்த கருத்து தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்