ஒரே நேரத்துல 60 லட்சம் பேர் நுழைஞ்சிருக்காங்க! – இ-பாஸ் முடக்கம்; அமைச்சர் விளக்கம்!
திங்கள், 7 ஜூன் 2021 (11:58 IST)
தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் பதிவு செய்யும் இணையதளம் முடங்கியது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இ-பாஸ் பெற ஒரே சமயத்தில் பலர் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியது. இதனால் பலர் இ-பாஸ் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இ-பாஸ் இணையதள முடக்கம் குறித்து பேசியுள்ள அமைச்சர் மனோ.தங்கராஜ் “ஒரே சமயத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ-பாஸ் விண்ணப்பிக்க உள்நுழைந்ததால் இ-பாஸ் இணையதளம் முடங்கியுள்ளது. பிரச்சினை சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் இ – பாஸ் இணையதளம் செயல்படும்” என கூறியுள்ளார்.