காதலித்த பெண்ணை புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞர்; உடந்தையாக இருந்த பெற்றோர் - அதிர்ச்சி ரிப்போர்ட்

செவ்வாய், 23 ஜூன் 2015 (16:58 IST)
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே தான் காதலித்த பெண், வேறொருவருக்கு மணம் முடிக்கப்பட்டதால், ஆத்திர மடைந்த காதலன் அந்த பெண்ணை மானபங்கம் செய்து மிரட்டியுள்ளார்.
 
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் காதலனின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவிலைச் சேர்ந்தவர் விஜி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொறியியல் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜாராமனின் மகன் ராஜ்பகதூர் (25). முதலில் இவர் விஜியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜ்பகதூர் மீது விஜிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
 
அதன் விளைவாக அடிக்கடி சந்தித்துக் கொள்வது, தொலைபேசியில் பேசுவது என்று வளர்ந்து ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வரை முன்னேறியுள்ளனர். ஆனால் பழக பழக ராஜ்பகதூரின் உண்மை குணம் தெரிந்து அவரிடமிருந்து விஜி விலக ஆரம்பித்துள்ளார். இதற்கிடையே அவர்களின் பழக்கம் விஜியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதனால் உடனடியாக விஜிக்கு உறவு வட்டாரத்தில் மாப்பிள்ளை பேசி முடித்துவிட்டனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்பகதூர் விஜியின் வீட்டுக்குச் சென்று “நானும் உங்கள் பெண்ணும் நெருக்கமாக பழகியிருக்கிறோம். எனவே உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்” என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜ்பகதூரின் பெற்றோரை அழைத்து பேசிய விஜியின் பெற்றோர், “இப்போது எங்கள் பெண், உங்கள் பையனை விரும்பவில்லை. அவள் விரும்பிய படிதான் வேறு இடத்தில் எங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளோம். அதனால் உங்கள் பையனை ஒதுங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று பேசி அனுப்பிவிட்டனர்.
 
அதற்குபிறகுதான் ராஜ்பகதூர் தனது மூர்க்க புத்தியை காட்டத் தொடங்கியுள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் துணையாக இருந்துள்ளனர்.
 
தன்னிடம் உள்ள விஜியுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப் படங்களை கொடுத்துவிடுவதாக விஜியை தன் வீட்டுக்கு அழைத்த ராஜ்பகதூர், மீண்டும் விஜியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் வலுக்கட்டாயமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது ராஜ்பகதூரின் பெற்றோரும் வீட்டில் இருந்துள்ளனர்.
 
“நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் எல்லாவற்றையும் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவேன், உன் பெற்றோரிடம் இதுபற்றி கூறினால் அவர்களது உயிருக்கும் ஆபத்துதான்” என்று விஜியை ராஜ்பகதூர் மிரட்டியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜி, உடனே தன் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகவலை கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் விஜியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
 
புகார் மீது நடவடிக்கை ஏதும் இல்லாததால், மயிலாடுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்கடிமணியை நேரில் சந்தித்து விஜி முறையிட்டுள்ளார்.
 
காவல் கண்காணிப்பாளர் உடனடியாக வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்யும்படி செம்பனார்கோவில் போலீசாரை அறிவுறுத்தினார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜ்பகதூர், அவரது தந்தை ராஜாராமன், தாய் கவுசல்யா, ராஜ்பகதூரின் நண்பர் ராமராஜன் ஆகிய நால்வர் மீதும் பாலியல் வன்கொடுமை உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ராஜ்பகதூரையும், ராமராஜனையும் கைது செய்தனர். ராஜாராமனும், கவுசல்யாவும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சச்சிதானந்தம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவ்வழக்கை பாதுகாப்புணர்வுடன் கையாண்டோம். ஆனாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து முதல் குற்றவாளியையும், அவரது நண்பனையும் கைது செய்துள்ளோம். ராஜ்பகதூரின் பெற்றோரை தேடி வருகிறோம். அப்பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வோம்” என்றார்.
 
இதற்கிடையே இத்தகவலை விஜியின் பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாரிடம் நடந்த சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். விஜியின் தரப்பில் தவறு ஏதும் இல்லை என்று தெரிந்துகொண்ட மாப்பிள்ளை வீட்டாரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்