மதுரை மாவட்டம் அய்யகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர். இவருக்கு மஞ்ச மணி, கார்த்தி என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் வீட்டுக்கு அருகே வசித்து வந்தவர் பாரதி. அவருக்கு ஜெயசூர்யா என்ற மகன் ஒருவன் உள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் பாரதி வீட்டுக்கருகே ஆண்டவர் குப்பையை கொட்டியதாக இரு வீட்டாருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட கை கலப்பில் பாரதி மகன் ஜெயசூர்யா ஆண்டவரை கீழே தள்ளிவிட இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஜெயசூர்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதுடன், அவரது குடும்பமும் அலங்காநல்லூருக்கு குடிப்பெயர்ந்து சென்றுள்ளனர். எனினும் ஜெயசூர்யாவுக்கு ஆண்டவர் குடும்பத்தால் அச்சுறுத்தல் இருந்ததாக தெரிகிறது. இதனால் கிராம பஞ்சாயத்தார் இடை புகுந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் உறவினர் ஒருவர் வீட்டு விழாவிற்காக அய்யகவுண்டன்பட்டிக்கு சென்றுள்ளார் ஜெயசூர்யா.
இதையறிந்த ஆண்டவர் மகன்கள் மஞ்ச மணி மற்றும் கார்த்திக் ஆகியோர் ஜெயசூர்யா நிகழ்ச்சி முடிந்து தனது மாமாவுடன் பைக்கில் சென்றபோது துரத்தி சென்று பைக்கை கீழே தள்ளி ஜெயசூர்யாவை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஜெயசூர்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் ஜெயசூர்யா உயிரிழந்து விட்டார். இந்த வழக்கில் ஆண்டவர் மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதாரண குப்பை கொட்டிய பிரச்சினை இரு உயிர்களை பழி வாங்கி குடும்ப பகையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.