சிறுமி கருமுட்டை விற்பனை; மருத்துவமனைகளுக்கு சீல்! – அமைச்சர் அதிரடி!

வியாழன், 14 ஜூலை 2022 (11:07 IST)
ஈரோடு சிறுமியின் கருமுட்டையை பெற்ற 4 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த சிறுமியை அவரது தாயாரும், தாயாரின் காதலனும் சேர்ந்து கட்டாயப்படுத்தி கருமுட்டைகளை மருத்துவமனைகளுக்கு விற்றதும், சிறுமியை தாயாரின் காதலன் வன்கொடுமை செய்த சம்பவமும் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியின் தாயார், தாயாரின் காதலன், கருமுட்டை விற்ற ஏஜெண்ட் பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதில் சிறுமியின் கருமுட்டையை பெற்ற மருத்துவமனைகளிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணை அதிகாரிகள் கேட்ட தகவல்கள், ஆவணங்களை மருத்துவமனைகள் அளிக்கவில்லை என விசாரணை குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஒரு சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டைகளை எடுத்திருக்கிறார்கள். இதன் சாதக, பாதகங்கள் குறித்து சிறுமிக்கு சொல்லப்படவும் இல்லை. இது அதிர்ச்சியாக இருக்கிறது.

சிறுமி கருமுட்டை தொடர்பான வழக்கில் விசாரணை குழு கேட்ட பல ஆவணங்களை மருத்துவமனைகள் அளிக்கவில்லை. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தபட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள உள்நோயாளிகளை 14 நாட்களுக்கும் பிற மருத்துவமனைகளுக்கு மாற்றவும், டிஸ்சார்ஜ் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்ட அரசு மருத்துவ காப்பீடு உரிமமும் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்