மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அவரை யாரும் சந்திக்கவில்லை எனவும், அவர் இட்லி சாப்பிட்டார் எனவும், அவரை நாங்கள் சந்தித்தோம் எனவும் பொய் சொன்னோம் என அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, திமுக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். மூன்று தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கைரேகை வைத்ததும் எப்படி?. உடனே சிபிஐ விசாரணை தேவை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் ஜெ. இருந்த போதுதான் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, வேட்பு மனுக்களில் ஜெயலலிதா கையெழுத்திட்டு, அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தி முடித்தது. அந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.