உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது: சட்டசபையில் மசோதா தாக்கல்

திங்கள், 30 ஜனவரி 2017 (16:46 IST)
உள்ளாட்சி தேர்தலை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த இயலாது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்தார்.


 

 
தமிழ்நாடு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி சட்ட திருத்த முன் வடிவுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அந்த சட்ட திருத்த மசோதாவில்,
 
2017 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் மற்றும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு 12-ம் வகுப்பு (எச்.எஸ்.சி.) மற்றும் 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) உள்ளடங்கலாக நடைபெறும் பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறையின் தேர்வு பணியினை பார்த்துக் கொண்டிருப்பர். 
 
அதன் காரணமாக அவர்களை ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் பணிகளுக்காக அமர்த்த முடியாது  மிகப் பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் கணக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதாலும் அவைகள் ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்த பின்னரே கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
 
எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று தனி அலுவலர்களின் பதவி காலம் முடிவதை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவல்களை நிர்வகிக்க பொருத்தமான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட தேர்தல் ஆணையராக இருக்கும் அதிகாரிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
தனி  அதிகாரிகளின் பதவி காலத்தை 2016-ம் ஆண்டு டிசம்பர் 31க்கு அப்பால் 2017ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் தேதி வரை 6 மாத காலத்திற்கு தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீடிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.இந்த சட்டம் பிறப்பிக்கப் பட்டபோது சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறாததால் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டியதாயிற்று. 
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்