கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி

செவ்வாய், 22 மார்ச் 2022 (23:12 IST)
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள
காணியாளம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியானது கரூர் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமிக்க  பள்ளி. இப்பள்ளிக்கு மிக அருகில் தான் எனது கிராமம் வ. வேப்பங்குடி உள்ளது. 
 
வ. வேப்பங்குடி சுதந்திர இந்தியாவில் இன்னும் அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத ஒரு கிராமம். எனது கிராமத்தை முன்னேற்ற இன்னும் பல தேவைகள் உள்ளது. கிராமத்தை முன்னேற்ற இன்னும் பல செயல்பாடுகளும்  உதவிகளும் பொருளாதார தேவையும் அதிகம் தேவைப்படுகிறது. 
 
ஆனால் மாணவர்களை படிக்க வைப்பதற்கு நல்ல ஆலோசனைகளும், வழிகாட்டுதலும், மாணவர்களை ஊக்கப்படுத்துதலும் தான் அதிகம் தேவைப்படுகிறது என்றால் மிகையாகாது. ஏனென்றால் போட்டி நிறைந்த உலகில் நாளொரு போட்டி தேர்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மாணவர்கள் நீட் போன்ற தேர்வின் மீதான பயத்தினால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற துன்பியல் சம்பவங்கள் பெரிதும் நடக்கிறது. அதனை மாற்ற வேண்டுமானால் நீட் தேர்வு முற்றும் முழுதுமாக நீக்கப்பட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துதல் மிக அவசியம். 
 
எனது கிராமத்தில் இருந்து யாராவது ஒருவரை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற என் நோக்கம் என்று நிறைவேறும் என்று நானறியேன். ஆனால் என் முயற்சி அதுவரை தொடரும். இதோ அதற்கு ஒரு வாய்ப்பினை  காணியாளம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சண்முகம் அவர்கள் வழங்கி இருக்கிறார். எங்கள் ஊர் பகுதியில் இருந்து ஒரு நல்ல மருத்துவர் வருவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியில் இதோ நீட் தேர்வுக்கான பயிற்சி கையேடுகள் பசுமைக்குடியின் சிறு முயற்சியால் துவங்கப்பட்டுள்ளது. 
 
அதே பள்ளியில் ஒரு பயிற்றுநரை நியமித்து அவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும். அவர்களுக்கு  தொடர் பயிற்சி மற்றும் தொடர் மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சி தொடர்ந்து வழங்க வேண்டும். இப்போது மாணவர்கள் பயிற்சி கையேடு மூலம் படிக்கட்டும் என்று இம்முயற்சியை எடுத்துள்ளோம். 
 
இதனை படிக்கும் எவரும் நல்ல தரமான நீட் பயிற்சிக்கான கையேடுகள் இருந்தால்
அறிமுகப்படுத்துங்கள். நல்ல ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்