முதலில் மக்களை பாருங்கள்..பிறகு கட்சியை பார்க்கலாம் - எடப்பாடியை விளாசிய குஷ்பு

திங்கள், 29 மே 2017 (13:57 IST)
இறைச்சி மாடுகளை வெட்டக்கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இந்திய முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கூடாது என ஆளும் பாஜக அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்த்து  கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.  
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குஷ்பு “இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் பாஜக ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், பாஜக அதை தடை செய்யவில்லை. 
 
இந்த முடிவை எடுக்கும் பாஜகவினர் லெதர் பேக், செருப்பு, பெல்ட் ஆகிய தோல் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மாடுகளை காரணம் காட்டி அவர்கள் மனிதர்களை துன்புறுத்தி வருகிறார்கள். எத்தனை பேரை கொலை செய்துள்ளார்கள். அதன் ஏன் அரசு தடுக்கவில்லை?
 
மாட்டிறைச்சி விவகாரத்தில், பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி வாய் திறக்க மறுக்கிறார். இது மத்திய அரசிடம் அவருக்குள்ள பயத்தை காட்டுகிறது. அவர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவே பேசாமல் இருக்கிறார். முதலில் மக்களை பாருங்கள்.. அதன் பின் கட்சியை பார்க்கலாம்” என குஷ்பு காட்டமாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்