அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்ந்து செயல்பட நீதிமன்ற உத்தரவு வழிவகுத்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து தற்போது மீண்டும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவே ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். இந்நிலையில் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் நீடிக்கும் நிலையில் தேனியில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை மாவட்ட செயலாளர் செல்வராஜ் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கட்சியையும், தொண்டர்களையும் காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வம் புலியாக மாறி தாக்குவார். கட்சியில் உள்ள சண்டை குழப்பங்களுக்கு ஜெயக்குமார்தான் காரணம். எனவே ஜெயக்குமார் போன்ற ஆட்கள் இனிமேல் கட்சியில் தலை தூக்க முடியாது.
எடப்பாடி பழனிசாமி கட்சியை கம்பெனியாக நடத்த முயல்கிறார். இன்னும் ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ள நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து விடுவார்கள்” என பேசியுள்ளார்.