தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் குஷ்பு?

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:53 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக குஷ்பு நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
பிரதமர் நரேந்திர மோடி - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் சந்திப்பு குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக கூறி, தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக போராட்டம் நடத்தினர். மேலும், சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களை தாக்கினர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடும்பாவி எரித்தனர். போராட்டம் நடத்தினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குறித்து கடும் விமர்சனம் செய்தனர்.
 
இந்த நிலையில், காமராஜர் அரங்க வணிக வளாகத்தில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக வளர்மதி என்பவர் புகார் கிளப்பியுள்ளார். இந்த சம்பவம் காவல் நிலையம் வரை சென்று வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது போன்ற காரணங்களால், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அகில இந்திய தலைமை கடும் கோபம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதன் விளைவாக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், புதிய தலைவர் பதவிக்கு பிரபல நடிகை குஷ்பு நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து கூறப்படுகின்றது. இந்த புதிய நியமனம் மூன்று மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
நடிகை குஷ்பு தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்