அம்மனுக்கு ஆடை கட்டுப்பாடா?: கொந்தளிக்கும் கஸ்தூரி!

செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:30 IST)
சமீபத்தில் மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு இரண்டு குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்து வழிபட்டனர். இந்த புகைப்படம் வைரலாக பரவ குருக்கள் ஆகம விதிகளை மீறிவிட்டனர் என அவர்களை பணி நீக்கம் செய்துவிட்டனர்.
 
இந்த குருக்களின் செயலை பலரும் விமர்சித்தும், பலரும் வரவேற்றும் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குருக்களுக்கு ஆதரவாக பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு மிக அழகிய முறையில், கண்ணியமாக கலாரசனையுடன் புதுமையாக சுடிதார் அலங்காரம் செய்வித்த இரு குருக்களை  பணி நீக்கம் செய்திருப்பது நியாயமற்ற பழமைவாதம். திருவாடுதுறை ஆதீனம் இருவரையும் மீண்டும் பாராட்டி பணியில் அமர்த்தவேண்டும்.
 
கண்ணப்ப நாயனாரின் எச்சிலையும் ஆண்டாளின்  சூடிக்கொடுத்த மாலைகளையும் போற்றும் நாம், தற்காலத்தில் ஒருவரின் பக்தியை குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடாதா? தன் குழந்தையாக பாவித்து விதம்விதமாக அலங்காரம் செய்து மகிழ்ந்த ஒரு பக்தரை புரிந்துக்கொள்ளக்கூடாதா?
 
மின்விளக்கு, எலக்ட்ரிக் மேளம், AC, ஒலிபெருக்கி, இது எதுவும் ஆகம கேடு இல்லை. ஒரு வித்தியாச அலங்காரத்தில்தான் ஆகமத்துக்கு ஆபத்தா? குளிக்காமல், ஏன், குடித்துவிட்டுக்கூட சிலர் வருகிறார்கள். எல்லாவிதமான ஆடையிலும் வருகிறார்கள். ஆனால் அம்மனுக்கு ஆடைக்கட்டுப்பாடா? என தனது டுவிட்டரில் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சுடிதார் அம்மன் என ஆங்கிலத்தில் ஹேஷ்டேகையும் உருவாக்கியுள்ளார் கஸ்தூரி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்