கரூர் கூட்ட நெரிசலுக்கு 7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே காரணம்: பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

Mahendran

புதன், 15 அக்டோபர் 2025 (13:14 IST)
கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த கோர நெரிசலுக்கு, தவெக தலைவர் காட்டிய 7 மணி நேர தாமதமும், கூட்டத்தின் விதிமீறல்களுமே முக்கிய காரணம் என்று விளக்கமளித்தார்.
 
செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த கூட்டத்திற்கு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாகவும், 517 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
 
விஜய்  பகல் 12 மணிக்கு வராமல், 7 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு வந்ததே நெரிசலை அதிகரித்தது. மேலும், கூடியிருந்த மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி பிரசார வாகனம் 35 மீட்டர் தூரம் வரை சென்றதாலும் நெரிசல் ஏற்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
 
மீட்புப் பணிகள் நடைபெற்றபோது, தவெக-வினர் 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கியதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
 
"கட்டுப்பாடுகளை மீறும்போது பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். இனிமேல் கூட்டங்கள் நடத்தும் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், துயரம் நிகழ்ந்த இரவே தான் கரூர் சென்று ஆறுதல் அளித்ததாகவும், நள்ளிரவு 1.41 மணிக்கு உடற்கூராய்வு தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்