செய்தியாளர்களை தாக்கிய கும்பல் - எம்.எல்.ஏ. கணவனின் அராஜகம்

சனி, 21 ஜனவரி 2017 (12:06 IST)
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ-வாக கடந்த தேர்தலின் போது பெரும்பான்மை மிகு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கீதா. இவர் தேர்தலுக்கு முன்பு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். அவரது கணவர் மணிவண்ணன், நெரூர் வடபாகம் பஞ்சாயத்து தலைவராக இருந்த போது பல நூதன மோசடிகளை செய்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


 

 
இந்நிலையில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தன் மேல் எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறி மீண்டும் பஞ்சாயத்து தலைவர் பதவியை வாங்கினார். தேர்தலின் போது கீதா என்பவர் கீதா மணிவண்ணன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஏனென்றால் தன்னுடைய கணவர் ஊழல் பிரச்சினையில் இருந்த நிலையில், அவருடைய பெயரை முற்றிலுமாக நிராகரித்தார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு கீதா மணிவண்ணன் என்ற பெயரை சேர்த்து தற்போது உபயோகித்து வருகிறார். 
 
கீதாவின் கணவர் மணிவண்ணன், கரூர் மாவட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எம்.எல்.ஏ கணவன் என்று கூறி அவராகவே கலந்து கொண்டு வந்தார். மேலும் ஆங்காங்கே குடிபோதையில் மணல் லாரிகளை தேக்குவதோடு, தனக்கு கமிஷன் தர வேண்டும் என்று கூறி பல்வேறு அடாவடியில் ஈடுபட்டார். மேலும், காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரிடம் தகராறு மேற்கொண்டு வந்தார். 
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற சாலைப்பாதுகாப்பு வாரவிழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற ஒவியம், பேச்சு மற்றும் கட்டூரை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் மட்டுமில்லாமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதாவும் கலந்து கொண்டார். மேலும் அவரது கணவர் மணிவண்ணனும் அமைச்சரின் சீட் அருகே முன்வரிசையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலமாக கரூர் மாவட்ட நிருபர்கள் ஏராளமானோருக்கு பகிர்ந்தனர்.
 
அந்நிலையில், கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் இருந்த மூத்த பத்திரிக்கையாளர் சி.ஆனந்தகுமாரை, மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் தாக்கினார்கள். மேலும் அன்னகாமாட்சியம்மன் கோயில் எதிரே உள்ள சம்பத்குமார் என்கின்ற தனியார் தொலைக்காட்சி நிருபரையும் இந்த கும்பல் வெறிகொண்டு தாக்கினர்.
 
பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த தகவல்கள் கரூரில் உள்ள மற்ற செய்தியாளர்களின் மத்தியில் சென்றவுடன், மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி எம்.எல்.ஏ கீதாவின் செயல்கள் குறித்து அதே கட்சியின் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க, அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 
 
இதன்படி இன்று காலை கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலைபாதுகாப்பு வார விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாதுகாப்பு பேரணியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியிலும் அதே எம்.எல்.ஏ கீதாவும், செய்தியாளர்களை தாக்கிய அவரது கணவர் மணிவண்ணனும் கலந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பற்றியும் அவ்வப்போது செய்திகள் மற்ற செய்தியாளர்கள் வெளியிடும் நிலையில், அவருக்கு ராஜகம்பளம் விரித்த நிகழ்ச்சி போல இருந்ததாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
செய்தியாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ கீதா, அவரது கணவர் மணிவண்ணன் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்