சிறையில் இருந்து வெளியான சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது என கருணாஸ் பேட்டி.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று மற்றும் உடல் நலக்குறைவு இருப்பதால் தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் முதலில் இருந்தே சசிகலா குறித்து அவதூறு பேசாமல் இருந்து வந்த கருணாஸ் தற்போது அவரது விடுதலைக்கு பின்னர் சசிகலா குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கூவத்தூரில் என்ன நடைபெற்றது என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். சசிகலா பற்றி இன்று கூறுபவர்கள் அன்று என்ன சொன்னார்கள் என்பது அனைத்து ஊடகங்களிலும் உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா.
ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் இந்த நிமிடம் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக, அதிமுகவுடன் தோழமையுடன் இருக்கிறோம். அது தொடரும்.
சசிகலாவை தற்போது வேண்டாம் என்று கூறுபவர்கள்தான் அவரை பொதுச் செயலாளர் என்று கூறினர். காலத்தின் நிர்பந்தம் காரணமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். எத்தனை காலங்கள் வந்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது.
அதிமுகவிற்கு பின் பாஜக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிமுக தலைமை சசிகலாவிற்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜக என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்.
ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர் கட்சி தலைவர் முதல்வர் என்ற பதவியில் இருந்தனர். எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரால் எப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா. சசிகலாவை எளிதில் எடை போடக்கூடாது. காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.