இன்னும் 15 நாட்களில் களத்திற்கு திரும்பும் திமுக தலைவர் கருணாநிதி!

புதன், 25 ஜனவரி 2017 (17:14 IST)
இன்னும் 15 நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கட்சிப் பணி ஆற்றுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு மாத காலத்திற்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.

இதனையடுத்து, திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 04ஆம் தேதி பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டது.

கூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவின் சட்டவிதி 18இல் திருத்தம் செய்யப்பட்டு, ஸ்டாலின் செயல் தலைவராக ஆக்கப்பட்டார். இதற்கிடையில் கருணாநிதியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், ”தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சையும், ஓய்வும் எடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 15 நாட்களில் கட்சிப் பணி ஆற்றுவார்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்