திமுக உடைந்து கலைஞர் திமுக உருவாகும் அபாயம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

புதன், 28 டிசம்பர் 2016 (10:02 IST)
தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவிற்கு இது சோதனை காலம் எனலாம். அதிமுகவின் தலைமை பதவியை வகித்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அந்த இடத்தை பிடிப்பதில் போட்டி நிலவுகிறது.


 
 
சசிகலாவிற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் இருந்து கொண்டு தீபா, முதல்வர் பன்னீர்செல்வம் என ஆதரவு அளித்து வருகின்றனர். மற்றொரு பிரதான கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல் போகிறது. எந்தவித நோயும் இல்லாவிட்டாலும் முதுமை அவரை வாட்டி வதைக்கிறது. பேச முடியாத நிலையில் உள்ள கருணாநிதி நினைவு சக்தியை இழந்துவிட்டதாக தகவல்கள் வருகிறது.
 
இந்நிலையில் கட்சியின் அடுத்த தலைமை மு.க.ஸ்டாலின் தான் என கூறுகின்றனர். ஒட்டுமொத்த கட்சியும் ஸ்டாலின் கைக்கு போக இருப்பதால் கனிமொழி, மு.க.அழகிரி போன்றோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
 
இதனால் ரகசியமாக கனிமொழியும், அழகிரியும் சேர்ந்து கலைஞர் திமுக என்ற புதிய கட்சியை தங்கள் ஆதரவாளர்களுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கான முயற்சிகளில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் இறங்கியுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் திமுக தொண்டர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்