வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு- அண்ணாமலை

சனி, 14 அக்டோபர் 2023 (16:45 IST)
காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியப் பெண்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லாமல், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன் ? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''கடந்த 31/12/2022 அன்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரை பாலியல் சீண்டல்கள் செய்த திமுக ரவுடிகள் பிரவீன், ஏகாம்பரம் இருவரையும், தமிழக பாஜகவின் அழுத்தம் காரணமாக, பல நாட்களுக்குப் பிறகு கைது செய்து, வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 13/10/2023 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், 12/10/23 அன்று மாலை, கே.கே. நகர் வடக்கு திமுக பகுதி துணைச் செயலாளர் விஜயகுமார் எனும் நபர், விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்குள் புகுந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா அனுப்பியதாகவும், நீதிமன்ற விசாரணையின் போது, குற்றவாளிகளுக்கு எதிராக எதுவும் கூறக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக, விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரிடம், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெண் காவலரை சமாதானமாக போகச் சொல்லுங்கள், வீணாக பிரச்சினைகள் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தொலைபேசி எண்ணையும் கேட்டுப் பெற்றுள்ளார் எனத் தெரிகிறது.

பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியையும் பிரியங்காவையும் அழைத்து, மகளிர் உரிமை மாநாடு என்ற நாடகத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியப் பெண்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லாமல், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்?'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்