லஞ்சம் வாங்கினால் தூக்கு – சிட்டிசன் அஜித் ஸ்டைலில் நீதிபதி ஆவேசம் !

செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (08:47 IST)
தங்கள் பணிகளைச் செய்வதற்காக அல்லது செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்குவோரைத் தூக்கிலிட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி பேசியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பரணிபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் ‘மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது. ஆனால் இதுவரையில் அத்தேர்வுத்தாள் கசிந்தது எப்படி என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அந்தப் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்க 1500 க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்வை ரத்து செய்து உடனடியாக புதிதாக தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது ‘தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் எழுத்துத் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும் அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி?’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதையெடுத்து ’அரசுத் துறைகளில் உள்ள அனைத்து இடங்களிலும் லஞ்சமும் ஊழலும் புகுந்துவிட்டது. நவீன சாதனங்களின் வருகையால் இப்போது அவை அதிகமாக வெளிவர ஆரம்பித்து விட்டன. லஞசத்தை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால் லஞ்சம் வாங்குவோரைப் பிடித்து தூக்கில் போடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து அவர்களின் சொத்துகளைப் பறிக்க வேண்டும் கடுமையான தண்டனை வழங்கினால்தான் லஞ்சம் வாங்கும் பழக்கம் ஒழியும்.’ என ஆவேசமாகக் கூறினர்.

மேலும் இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். நீதிபதிகளின் இந்த ஆவேசமானப் பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்