நேரு பிரதமராகவும், அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இருந்தால் தமிழகத்துக்கு இந்த நிலை வந்திருக்காது!

வெள்ளி, 5 மே 2017 (15:13 IST)
தமிழக மாணவர்கள் கட்டாயமாக நீட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதனை தமிழக அரசும் சரி தேர்வு எழுதுகிற மாணவர்களும் சரி ஒட்டுமொத்த தமிழகமுமே எதிர்க்கிறது.


 
 
தமிழகத்தில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த எதிர்ப்புகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தனது முடிவில் விடாப்பிடியாக உள்ளது. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
 
மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது. தமிழகத்தை அடிமை போல நடத்துகிறது. நீட் தேர்வு கூடாது என தமிழக சட்டசபை சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அதனை பற்றி கவலைப்படாத மத்திய அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் உள்ளது. இந்தி திணிப்பை போல நீட் திணிப்பு நடக்கிறது.
 
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள வெறும் 2 சதவீத மாணவர்களுக்காக மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள 98 சதவீத மாணவர்களையும் மாற சொல்வது அராஜகம், வன்முறை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் கூட்டாட்சி தத்துவமே கேள்விக்குறியாகிவிடும். தமிழர்கள் ஒவ்வொரு விசியத்துக்காகவும் போராடிக்கொண்டு இருக்க முடியாது.
 
நேரு பிரதமராகவும், அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்திருந்தால் தமிழகத்துக்கு இந்த நிலை வந்திருக்காது. 7 கோடி தமிழர்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய அரசுக்கு திராணி இருந்தால் நிராகரிக்கட்டும் என்றார் நீதிபதி ஹரிபரந்தாமன்.

வெப்துனியாவைப் படிக்கவும்