சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது யாரும் பார்க்கவில்லை, அப்போது கூறியது அனைத்தும் பொய் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும். சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே செய்தியாளர் சந்திப்பில் முன்னர் கூறும்போது, ஜெயலலிதாவின் அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என கூறினார். பொதுவாக நோயாளிகள் அறையில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாது என்றும் அவர் கூறினார். ஒரு வேளை கேமராக்கள் இருந்தாலும் அவை சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த பேட்டியில் தினகரன் ஜெயலலிதா எடை குறைந்து இருந்ததாக கூறினார். ஆனால் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் பொதுமக்கள் பார்வைக்க வைத்தபோது அவர் ஏற்கனவே இருந்த மாதிரியே தான் அப்படியே இருந்தார். எடை குறைந்து இருந்தது மாதிரி தெரியவில்லை. ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ விவகாரத்தில் தினகரன் மாற்றி மாற்றி பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.