தமிழகத்தில் பூரண மதுவிலக்கு - சட்டசபையில் ஜெ., திட்டவட்டம்

வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:48 IST)
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.



 





தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தபடும். இதற்கு முதல் கட்ட முயற்சியாக 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த போது அதனை விலக்கியது திமுக கட்சி. இது இன்றைய தலைமுறைக்கு தெரியாது என கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் அமளியில் ஈடுபட்டனர். மதுவிலக்கு குறித்த முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு கேட்டனர். அப்போது சபாநாயகர் தனபால், பதிலுரையின் போது பேசுவதற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும், பதிலுரை முடிந்த பின்னர் பேச வாய்ப்பு தரப்படும் என்றார்.

இதனை திமுக உறுப்பினர்கள் ஏற்காமல், மதுவிலக்கு குறித்த முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க மறுத்த சபாநாயகரை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் கச்சத்தீவு, பூரண மதுவிலக்கு என்ற இரண்டு வார்த்தைகளை சொன்னால் போதும் பதில் சொல்ல முடியாமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விடுகின்றனர் என்று கூறினார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்