மருத்துவமனையில் ஜெ. : வெளியான வீடியோ போலியா?

புதன், 1 ஆகஸ்ட் 2018 (11:13 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வெளியான வீடியோ போலியானது என்கிற சந்தேகம் விசாரணை ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணமடைந்தார். ஆனால், அவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. எனவே, அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. எனவே, இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 
 
அந்நிலையில்தான், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரனுக்கு நெருக்கமான வெற்றிவேல் எம்.ஏ. வெளியிட்டார். அந்த வீடியோவில் ஜெ. பழச்சாறு அருந்தியாறு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது போல் காட்சிகள் இடம் பெற்றது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெருவதற்கு இந்த வீடியோ முக்கிய காரணமாக இருந்தது.
 
இந்நிலையில், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனைக்கு சமீபத்தில் ஆறுமுகம் தலைமையிலான விசாரணைக்குழு சென்றது. ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அறையையும் ஆறுமுகம் பார்வையிட்டார். ஆனால், அந்த அறையில் இருந்த ஜன்னலுக்கு வெளியே மரம், செடி, கொடி என எதுவும் இல்லை. ஆனால், வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவில் ஜன்னலுக்கு பின் மரங்கள் இருந்தது. எனவே, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரித்த போது, இந்த அறையில்தான் ஜெ. கடைசிவரை இருந்தார். ஜன்னலுக்கு பின் மரங்கள் எதுவும் எப்போதும் இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
 
எனவே, வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ உண்மைதானா? அது எங்கு எடுக்கப்பட்டது? அல்லது அந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டதா? என்கிற சந்தேகம் விசாரணை ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. தினகரன் வசம் இருந்த வீடியோவை எடுத்து தான் வெளியிட்டதாக வெற்றிவேல் கூறியிருந்தார். எனவே, வெற்றிவேல் மற்றும் தினகரன் ஆகியோரை விசாரணை ஆணையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்