463 புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்த ஜெயலலிதா

வியாழன், 26 ஜூன் 2014 (16:19 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று, 463 புதிய பேருந்துகள், 39 புனரமைக்கப்பட்ட மற்றும் மலைப் பிரதேசங்களுக்கான 7 சிற்றுந்துகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.


 
இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
 
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று, தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 94 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 463 புதிய பேருந்துகள், 39 புனரமைக்கப்பட்ட மற்றும் மலைப் பிரதேசங்களுக்கான 7 சிற்றுந்துகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
 
ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்துச் சேவை, முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு புதிய பேருந்துகள் மற்றும் வழித் தடங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 87 பேருந்துகள்; விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 109 பேருந்துகள்; சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 34 பேருந்துகள்; கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 61 பேருந்துகள்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 109 பேருந்துகள்; மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 46 பேருந்துகள்; திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 17 பேருந்துகள், என 91 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 463 புதிய பேருந்துகள் மற்றும் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 39 பேருந்துகள்; 
 
மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில் சிற்றுந்துகள் சேவையைப் புதியதாக ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் கோட்டத்திற்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 சிற்றுந்து சேவையை அவர் துவக்கி வைத்தார்.
 
மொத்தம் 502 பேருந்துகள் மற்றும் 7 சிற்றுந்துகளைத் தொடக்கி வைப்பதன் அடையாளமாக ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று,  தலைமைச் செயலகத்தில் 7 ஓட்டுநர்களுக்கு பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கி, கொடியசைத்து பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகளைத் துவக்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு), போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் த. பிரபாகர ராவ், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பி.பி. இராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்