ஜெ.வின் மரணத்திற்கு பின், சசிகலா எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய போது, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்-ஸை நான்தான் அரசியலில் வளர்த்து விட்டேன். ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவரை நான்தான் முதலமைச்சர் ஆக்கினேன். ஆனால், தற்போது அவர் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் பதிலளித்த ஓ.பி.எஸ் “ 1980ம் ஆண்டு முதலே நான் அதிமுகவில் பொறுப்பில் இருந்து வருகிறேன். ஜெயலலிதா தான் என்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து என்னை எம்.எல்.ஏ.ஆக்கினார். மேலும், வெற்றி பெற்றால் உங்களை அமைச்சர் ஆக்குகிறேன் எனக் கூறினார். அதுபோலவே என்னை அமைச்சராக்கினார். நான் எனது பணிகளை சிறப்பாக செய்து வந்தேன். எனவே, அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்ட போது என்னை முதல்வர் பதவியில் அமர வைத்தார். மேலும், என்னுடைய விசுவாசத்திற்காகவே எனக்கு முதல்வர் பதவி அளித்ததாக ஜெயலலிதா என்னிடமே தெரிவித்தார். எனவே, எனது அரசியல் வளர்ச்சிக்கு நானே காரணம் என தினகரன் கூறிவருது பொய்யான ஒன்று.
மேலும், டி.டி.வி தினகரனை எம்.பி ஆக்கினார். ஆனால், 2007ம் ஆண்டில் இருந்து அவரை ஒதுக்கி வைத்தார். அவரிடமிருந்து அனைத்து பொறுப்புகளையும் பறித்தார். அவர்களின் குடும்பத்தையே வெளியேற்றினார்” என ஓபிஎஸ் பதிலளித்தார்.