தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையின் மீது குறிப்பிட்ட அளவிலான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
இவர்களை தவிர மேலும் பல எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் பக்கம் எந்த காரணத்துக்காகவும் எம்எல்ஏக்கள் சென்றுவிடக்கூடாது என நினைக்கும் சசிகலா அதிருப்தியில் உள்ள சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி ஓபிஎஸ் அணியின் முயற்சியை முறியடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக தங்களுக்கு விசுவாசமாக இருக்கும், அதே நேரத்தில் ஓபிஎஸ்-க்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்தில் தீயாக வேலை செய்யும் தங்க தமிழ் செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் நிதியமைச்சர் பதவி. தற்போது நிதியமைச்சராக ஜெயக்குமார் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் சிறையில் உள்ள சசிகலாவை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.