ஓபிஎஸ் ஒரு போன் போட்டா போதாதா, எதுக்கு வெட்டி விளம்பரம்: ஜெயகுமார்!

செவ்வாய், 21 ஜூன் 2022 (16:27 IST)
ஓபிஎஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறும், கட்சி பரபரப்புகள் அடங்கிய பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். 
 
பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவிற்கு கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  பாஸ் வழங்கப்படுகிறது. 
 
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதுவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. கடிதம் எழுதிவிட்டு வேண்டுமென்றே அதை ஊடகங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஈபிஎஸ்சிடம் தொலைபேசி மூலம் ஓபிஎஸ் பேசியிருக்கலாம். ஓபிஎஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். 
 
திட்டமிட்டபடி 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஒற்றைத் தலைமை என்பது நல்ல விஷயம். அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் ஒற்றை தலைமை ஏற்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை என்பது அதிமுகவில் தொண்டர்கள் தொடங்கி மூத்த தலைவர்கள் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்