திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறும்: கருணாநிதி உறுதி

புதன், 4 மே 2016 (22:31 IST)
திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறும்  என திமுக தலைவர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.
 

 
மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  பேசிய முதல்வர் ஜெயலலிதா “ஜல்லிக்கட்டு’’ பற்றிப் பேசி, அது நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம் என்பதைப் போல தேர்தல் பிரச்சாரப் பொய்களில் ஒன்றாக பேசியிருக்கிறார். எனவே அதற்கான விளக்கத்தைத் தர வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.
 
திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் 2007ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன.
 
அதைப்போலவே 2008 ஆம் ஆண்டும் கழக அரசால் முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 
2009 ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப்படுத்துவதற்கெனச் சட்டம் ஒன்றே நிறைவேற்றப் பட்டது.
 
ஆனால், அதிமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டிலேயே 15/1/2006 அன்று தமிழக அரசின் காவல் துறைத் தலைவர், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவையொட்டி அனுப்பிய சுற்றறிக்கையில் ஜல்லிக்கட்டு மற்றும் காளை வண்டிப் பந்தயம் போன்றவற்றை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
இந்தச் சுற்றறிக்கையிலிருந்தே அதிமுக அரசுக்கு தொடக்க காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு நடத்துவதில் விருப்பமோ அக்கறையோ இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 
ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு அதிமுக அரசு தொடர்ந்து செய்த துரோகம் தான் காரணம். எனவே தி.மு. கழக அரசு அமைந்தால் மத்திய அரசை அணுகி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டு, அதன் விளைவாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்