ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பிரபல நடிகர் நேரில் ஆறுதல் - ரூ. 5 லட்சம் நிதி உதவி

சனி, 4 ஜூலை 2020 (16:29 IST)
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.

அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பிடிபட்டார். இந்நிலையில் காவலர் முத்துராஜ் சிபிசிஐடியின் கைகளில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தேடி பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாற்று கிடந்த காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் முதலில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் விளாத்திக்குளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் வைத்து காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். 

இந்தியாவே உற்றுப் பார்த்து வரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மரண வழக்கில் அவர்களின் குடும்பத்திற்கு ஞாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது பிரார்த்தனையும்.

இந்நிலையில்,  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமார் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார், மேலும் அவர்களின் வீட்டில் உள்ள புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்,அதன்பின் ஜெயராஜின் மனைவி, மற்றும் மகளுக்கு  ஆறுதல் கூறி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ரூ. 5 லட்சம் ரொக்கமாக வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்