தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மற்றும் அவரது தோழியார் சசிக்கலா, இளவரசி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் 2015ம் ஆண்டில் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் கர்நாடகா கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு காலமான நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் செலுத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து நடந்த வழக்கில் அவரின் அசையும், அசையா சொத்துகளை விற்று அபராதத்தை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெயலலிதாவின் ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் ஏலத்தில் விடப்பட்டு அபராத தொகை திரட்டப்பட உள்ளது.
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர நகைகளில் 20 கிலோவை மட்டும் ஏலத்தில் விட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதம் 7 கிலோ நகைகள் அவரது அம்மா வழியாக அவருக்கு கிடைத்தவை என்று கூறப்படுவதால் அதை ஏலத்தில் விட தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த 7 கிலோ நகைகள் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது.
முன்னதாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜா.தீபா தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் ரத்த வழி உறவாக ஜா.தீபா மட்டுமே உள்ளதால் அவருக்கே போயஸ் கார்டன் இல்லம் சொந்தம் என தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் இந்த மீதமுள்ள 7 கிலோ ஆபரணங்களும் சட்டப்படி ஜா.தீபாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.