ரூ.20 கோடி லஞ்சம் ; கல் குவாரியில் பல கோடி மோசடி - சிக்குகிறாரா விஜய பாஸ்கர்?

ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (11:49 IST)
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதா வருமான வரித்துறையினர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

 
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அதே ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். 
 
அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். 
 
சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தரவும் பலரிடம் லஞ்சம் பெற்றதை அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.  

 
அதேபோல், விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் இருக்கிறது. அங்கும் விதிமீறல் நடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அரசு விதித்துள்ள அளவுக்கு மீறி பல மடங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில், விஜயபாஸ்கர் பல கோடிகள் ஆதாயம் அடைந்துள்ளதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  எனவே, லஞ்சம் பெற்றது ஒருபுறம், கல் குவாரியில் முறைகேடு என இரண்டு விவாகாரங்களில் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார். 
 
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறையினர் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் பரிந்துரைத்துள்ளது. அதுபோக, ரூ.20 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறையினர் கூறியிருப்பதால் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்வதோடு, அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இப்படி நெருக்கடிகள் நெருங்குவதால், இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜயபாஸ்கருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்