சோதனை மேல் சோதனை ; கூவத்தூரில் தங்கிய எம்.எல்.ஏக்களிடம் அடுத்த ரெய்டு?

சனி, 15 ஏப்ரல் 2017 (11:41 IST)
சில மாதங்களுக்கு முன்பு சசிகலா தரப்பினரால், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.5 கோடி பணமும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியது. 
 
இதனையடுத்து, அது தொடர்பாக விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக விளக்கம் அளித்தனர். இந்நிலையில், வருகிற 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், இன்னும் பல அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
 
எனவே, கட்சியின் பெயரை காப்பற்ற, விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயர் முடக்கம், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, விஜயபாஸ்கரிடம் வருமான வரிச்சோதனை என தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் எடுக்கும் நடவடிக்கைகள் அதிமுக தலைமையை கலங்கடித்து வருகிறது. இதனால் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், அதிமுக ஆட்சியை கைப்பற்ற ஓ.பி.எஸ் அணி முயன்ற போது, கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட 122 அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சோதனை மற்றும் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஏனெனில், நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க, அந்த எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் பல கோடி பணம் மற்றும் தங்கம் ஆகியவை கொடுக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது. இது குறித்த ஆதாரங்களை உளவு பிரிவு மூலம் வருமான வரித்துறையினர் திரட்டி வைத்திருப்பதாக தெரிகிறது. எனவே, அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அவர்கள் யாரிடம் கொடுத்து வைத்துள்ளார்கள்? அல்லது பதுக்கி வைத்துள்ளனர் என்பதை கண்டறிய, அவர்களின் வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடு ஆகியற்றில் விரைவில் சோதனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்