மிடாஸ் மது ஆலையில் கோடிக்கணக்கில் கொள்ளை - அதிகாரிகள் அதிர்ச்சி

வெள்ளி, 17 நவம்பர் 2017 (11:46 IST)
சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான மிடாஸ் மது பானை ஆலையில், முறைகேடான பரிவர்த்தனைகள் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


 

 
சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில் 1600 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல ஆவணங்களும், தங்க மற்றும் வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில், சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆண்டுகளாக, கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில், மதுபானம் தயாரிக்க 2001ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரே நாளில் அனுமதி அளித்தார். மேலும், இந்த ஆலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விற்பனை செய்வதற்காகவே, டாஸ்மாக் திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு.
 
அந்த ஆலையில், சரக்குகளை ஏற்றிச்செல்வதில் நூதன வழிகளில் முறைகேடு செய்து கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.  இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்கள்:
 
மிடாஸ் ஆலையில் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு மதுபானங்களை ஏற்றி செல்ல 150க்கும் மேற்பட்ட லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியை சேர்ந்த சசிகலா உறவினர் சண்முகம் என்பவர் தனது மாருதி நிறுவனம் மூலம் பல லாரிகளை வைத்து விதிமுறையை மீறி மிக அதிக அளவில் சரக்குகளை எடுத்து சென்றுள்ளார்.
 
மேலும், சசிகலாவின் மற்றொரு உறவினர் மூலமாகவும் சரக்குகள் எடுத்து செல்லப்பட்டது. இதில், அடிக்கடி சரக்குகள் எடுத்து சென்றபோது பொய் கணக்குகள் காட்டி பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி, அந்த பணத்தை நிலம் உள்ளிட்ட பலவற்றில் முதலீடு செய்துள்ளனர். அதற்காக பல பினாமிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அதுபோக, மிடாஸ் ஆலையின் வருமானத்தை குறைத்துக் காட்டியும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்