தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் இறுதியிலும், இந்த மாத முதல் வாரத்திலும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை. மேலும், படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரனும் கூறியிருந்தார்.
அதேபோல், வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் மழை பற்றி கருத்து தெரிவித்த போது, 19ம் தேதிக்கு பின் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். அதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், இந்த மாத இறுதியிலும் மழை பெய்யும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ வருகிற 21ம் தேதி அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். அது தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பில்லை. ஆனால், காற்றின் சுழற்சியை பொறுத்து தென் மாவட்டங்களில் மழை பெய்யும். அதேபோல், தென் கிழக்கு வங்க கடலில் வருகிற 27ம் தேதி புதிய காற்றாழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.