’கழிவறை சுத்தம் செய்யவும், மாட்டுச்சாணி அள்ளவும் வைத்தனர்’ - ஈஷா மைய மாணவர்கள் திடுக்

திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (12:39 IST)
தண்டனை பெற்ற பிள்ளைகளை கழிவறை சுத்தம் செய்ய வைப்பதும், மாட்டுச்சாணி அள்ள வைக்கவும் செய்கின்றனர் என்று ஓய்வுபெற்ற உளவுத்துறை காவலர் மகன்கள் தெரிவித்துள்ளனர்.
 

 
ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 
தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.
 
இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன் என்பவர், ஈஷா யோகா மையத்தில் உள்ள சமஸ்கிருத குருகுல பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்த்த தனது மகன்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அவரது மகன்கள் கூறுகையில், ”அங்கு நடைபெறும் சிறுசிறு தப்புகளுக்குகூட சேவா என்கிற தண்டனை வழங்கப்படுகிறது. இதில் தண்டனை பெற்ற பிள்ளைகள், மற்ற பிள்ளைகள் என இரண்டாகப் பிரித்து வைக்கப்படுகிறார்கள்.
 
தண்டனை பெற்றவர்களுக்கு உப்பில்லாத உணவும், மற்ற பிள்ளைகளுக்கு பலகாரத்தோடு உணவும் பரிமாறப்படுகிறது. மேலும், சேவா தண்டனை பெற்றவர்கள், கழிவறை சுத்தம் செய்ய வைப்பதும், மாட்டுச்சாணி அள்ள வைக்கவும் செய்கின்றனர்.
 
மேலும், மையத்தில் உள்ளவர்களின் துணிகளைத் துவைத்துத் தருவதும், வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளை சுத்தம் செய்ய வைப்பதும், இதுபோக தினந்தோறும், நூறு தோப்புக்கரணத்தில் இருந்து ஐநூறு தோப்புக்கரணம் வரை கட்டாயம் போட வேண்டும் என்பது போன்ற தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.
 
எனக்கு மட்டுமல்லாமல் ஆறு வயது குழந்தைகளுக்குக்கூட இதுபோன்ற தண்டனை கொடுக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்