பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு
சனி, 28 செப்டம்பர் 2024 (15:19 IST)
ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஈஷா நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் கூறியதாவது:
சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர் பியூஷ். இந்து கலாச்சாரம், ஆன்மீக மரபுகள் மற்றும் அதை சார்ந்து இயங்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவது தான் இவருடைய முழு நேர தொழிலாக உள்ளது. இவர் ஈஷாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், கோவையில் செயல்படும் சில உதிரி அமைப்பினர் இவருடன் சேர்ந்து புது புது அவதூறுகளை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். இந்த உதிரி அமைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு ஈஷாவிற்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்ததும், அவர்களை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, உள்ளூர் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள வீடியோவில், லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் வணங்கும் ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து மிக கொச்சையாக அவதூறு பரப்பி உள்ளார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அவர் பேசியுள்ள கருத்துக்கள் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஆர்ப்பாட்டம் என பல வழிமுறைகள் மூலமாக மக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் இயங்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்த உதிரி அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.