கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளையும் சந்தித்து பேச சசிகலா முடிவெடுத்தார். தொடர்ந்து, ஜனவரி 4ஆம் தேதி முதல், 9ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சிக்குள் கரையான் புகுந்துவிட வழி ஏற்படுத்திவிடக் கூடாது என மாவட்ட நிர்வாகிகளிடம் சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ’தி இந்து’ தமிழ் நாளிதழ் கருத்துப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கட்சிக்குள் கரையான் புகுந்துவிடக் கூடாது என்று தனது கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்வதுபோல் உள்ளது. அதாவது, அவர் தன்னைத் தானே கூறிக் கொள்வதுபோல கருத்துப்படம் உள்ளது.