யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது, நடவடிக்கை உறுதி: அமைச்சர் மா சுப்பிரமணியன்..!

Mahendran

செவ்வாய், 22 அக்டோபர் 2024 (12:54 IST)
யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் திமுக அரசு அவர்களை காப்பாற்றாது என்றும், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
யூடியூபர் இர்பான் தனது சமூக வலைதளத்தில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
குழந்தையின் தொப்புள் கொடியை ஒரு மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் தான் வெட்ட வேண்டும் என்றும், எந்தவித தகுதியும் இல்லாத இர்பான் வெட்டியது தவறு என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே மருத்துவத்துறை இயக்குநர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியபோது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்றும், இர்பானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல, தண்டிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக அரசு எப்போதும் நினைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்