இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி: ஒரு மலரும் நினைவு
ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:46 IST)
பொதுவாக தமிழ் திரையுலகில் உள்ளவர்கள், பாலிவுட் திரையுலகில் புகழ் பெறுவது என்பது மிகவும் கடினமான விஷயம். இன்று வரை பாலிவுட்டில் நம்பர் ஒன் நட்சத்திரமாக இருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகையர் யாரும் இல்லை. ஒரே ஒருவரை தவிர. அவர் தான் ஸ்ரீதேவி
சிவகாசியில் பிறந்து, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினி, கமல், நாகார்ஜூனா, உள்பட தென்னிந்திய உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து பின்னர் 1983ஆம் ஆண்டு ஹிம்மத்வாலா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆகவே அமிதாப் உள்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பத்து வருடங்கள் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த ஒரே தமிழ் நடிகை ஸ்ரீதேவி மட்டுமே.
1971-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி 8 வயதில் பூம்பட்டா என்ற மலையாள படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்தது. 8 வயதில் விருது வாங்கியதன் மூலம் அவர் ஒரு பிறவி நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.
50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 4 முறை சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருதுகளையும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் ஸ்ரீதேவி பெற்றுள்ளார்
எம்ஜிஆருடன் நம்நாடு படத்திலும், சிவாஜி கணேசனுடன் 'பாபு' உள்ளிட்ட ஒருசில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்த ஸ்ரீதேவி, பின்னாளில் சிவாஜிக்கு ஜோடியாக பட்டாக்கத்தி பைரவன், சந்திப்பு போன்ற படங்களில் நடித்தார்
கமல்ஹாசனுடன் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், தாயில்லாமல் நானில்லை, குரு, வறுமையின் நிறம் சிகப்பு, சங்கர்லால், மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், போன்ற படங்களிலும் ரஜினியுடன் மூன்று முடிச்சு, காயத்ரி, 16 வயதினிலே, தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
1986, 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகிய இருவரையும் இணைத்து ஒருசில வதந்திகள் பரவியது. ஆனால் அந்த வதந்திகள் சில மாதங்களில் முடிவுக்கு வரவே பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பின்னர் திரையுலகை விட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, 6 ஆண்டுகள் கழித்து ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பின்னர் “இங்கிலீஷ் விங்கிலிஷ்” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படத்தில் தல அஜித் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவி பெற்ற விருதுகள்:
பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.
நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.
MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.
வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.
திரையுலகையும், பூவுலகையும் விட்டு மறைந்தாலும் சினிமா என்ற ஒன்று இருக்கும் வரை ஸ்ரீதேவியின் புகழ் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை