கரூரில் சுதந்திர தின விழா : ரூ.6.61 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்

புதன், 15 ஆகஸ்ட் 2018 (18:36 IST)
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் , 72–ஆவது சுதந்திர தின விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 
 
நம் இந்தியத் திருநாட்டின் 72-ஆவது சுதந்திர தினம், நாடு முழுவதும் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 72-ஆவது சுதந்திர தின விழா (இன்று-15.8.2018) கோலாகலமாக நடைபெற்றது. 
 
காலை 9:20 மணிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவர், திறந்தவெளி ஜீப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உடன் சென்று, அணிவகுப்பைப் பார்வையிட்டார். மேலும், சமாதான புறாக்கள் மற்றும் வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 
 
மேலும் இவ்விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பொன்னாடை அணிவித்தும் பூச்செண்டு வழங்கியும் சிறப்பு செய்தார். காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு  பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இம்மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் அரசு துறைகளின் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. 
 
இதனையடுத்து, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர் நலம், வருவாய், கூட்டுறவு, வேளாண்மை, தோட்டக்கலை, தாட்கோ, உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில், 150 பயனாளிகளுக்கு ரூ. 6.61 கோடி மதிப்பிலான வாகனங்கள்-தையல் இயந்திரம்-நவீன செயற்கைக் கால்-கல்வி உதவிகள்-ஆட்டோ-நலிந்தோர் உதவி-விசைத் தெளிப்பான்-நுண்ணீர் பாசனக் கருவிகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கினார். இந்த விழாவில்,  அரசின் அனைத்துத் துறை அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
தொடர்ந்து, இம்மாவட்டத்தைச் சேர்ந்த  அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மொத்தம் 500க்கும் மேற்படோர்  கலந்துகொண்ட 10 வகையான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 
-சி. ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்