ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி!

வியாழன், 12 ஜனவரி 2017 (16:34 IST)
ஒட்டு மொத்த தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் ஒரே கோரிக்கையுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரும் வேளையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததையடுத்து தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்துள்ளது.
 
இந்நிலையில் இந்த முறை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வேண்டும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய வேண்டும் இல்லையென்றால் தடையையும் மீறி நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.
 
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாஜக அதனை ஆதரிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அன்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு எதிராக தற்போது கருத்து கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி.


 
 
தன்னுடையை டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தின் தடையையும் மீறி சட்டத்தை மதிக்காமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவில்லை என கூறி மத்திய அரசு கண்டிப்பாக குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்தும் என கூறினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக தலைவர்களில் மாறுபட்ட கருத்து நிலவி வருவது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்