ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஆதங்கம்: என் அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை!

வியாழன், 6 அக்டோபர் 2016 (11:03 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது அண்ணன் மகள் தீபா அவரை பார்த்து ஆறுதல் சொல்ல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


 
 
முதல்வர் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது. ஆளுநர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை பார்க்க சென்றாலும் அவரை யாரும் பார்க்க முடியவில்லை என்ற செய்திகள் தான் வருகிறது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா அவரை பார்க்க சென்றார். ஆனால் அவரை மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கவில்லை.
 
எனது அத்தையை பார்க்க அனுமதித்தால் தான் நான் இந்த இடத்தை விட்டு போவேன் என அடம்பிடித்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மருத்துவமனை வாயிலுக்கு சென்று காத்திருந்து காத்திருந்து தினமும் திரும்புகிறார்.
 
சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டனர். எனது அத்தை என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரம் கடந்தும் அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. இது மிகவும் மோசமான சூழ்நிலை என அவர் குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்