உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 ஆக உயர்த்த ஒப்புதல்

புதன், 27 ஆகஸ்ட் 2014 (11:09 IST)
தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 60 இல் இருந்து 75 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பாலும், அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், அனைத்து மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது.

இதனடிப்படையில் மாநில அரசுகளின் கருத்துகளையும், ஒப்புதலையும் கேட்டு மத்திய அரசு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை உயர் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 45 நிரந்தர நீதிபதிகள், 16 கூடுதல் நீதிபதிகள் என்று மொத்தம் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 60 இல் இருந்து 75 ஆக உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கடிதத்தை, மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி, 75 நீதிபதிகளில், 50 நிரந்தர நீதிபதிகள், 25 கூடுதல் நீதிபதிகள் என்ற விகிதத்தில் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்போது, அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது இருக்கிற கட்டிடத்தில், புதிய உயர் நீதிமன்ற அறைகள் உருவாக்குவதற்கு போதிய இட வசதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் உயர் நீதிமன்ற அறைகள், நீதிபதிகளின் குடியிருப்புகள் என்று புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் ஒப்புதல் கடிதத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்