300 குடிநீர் ஆலைகளை மூடியது அரசு – கேன் வியாபாரிகள் போராட்டம்!
ஞாயிறு, 1 மார்ச் 2020 (10:23 IST)
தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் எடுத்து வந்த 300 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் பல இடங்களில் அனுமதியின்றி எக்கச்சக்கமாக தண்ணீரை உறிஞ்சுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதி பெறாத ஆலைகளை மூட உத்தரவிட்டது. அதன்படி தமிழகமெங்கும் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்த 300 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பல இடங்களில் கேன் குடிநீர் ஏஜெண்டுகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பெருநகரங்களில் பெரும்பாலும் மக்கள் கேன் குடிநீர் பயன்பாட்டையே நம்பி உள்ளதால் இந்த நடவடிக்கையால் பெரும் தட்டுப்பாடு எழும் என கூறப்படுகிறது.
ஆனால் நிலத்தடி நீரை இந்த நிறுவனங்கள் அனுமதியின்றி உறிஞ்சுவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.