மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது அதிமுக: விஜயகாந்த்

வெள்ளி, 27 நவம்பர் 2015 (09:37 IST)
அதிமுக அரசு மக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி, இலவசங்களை கொடுத்து வாக்குகள் பெறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திற்கு பின்பு பெரிய அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர் ஆதாரங்கள் புதியதாக உருவாக்கப்படவில்லை.
 
அதன் விளைவாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் நிரம்பி வழிந்தும், எவ்வித பலனும் இல்லாமல், நீர் முழுவதும் கடலில் சென்று வீணானது.
 
அணைகள் கட்டியும், ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தியும் இருந்தால் நீரையும் சேமித்திருக்கலாம், சேதங்களையும், பாதிப்புகளையும் தடுத்திருக்கலாம்.

அதிமுக அரசோ இதையெல்லாம் செய்யாமல் மக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி, இலவசங்களை கொடுத்து வாக்குகள் பெறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் முறையாக போய் சேரவில்லை என்றும், லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுவதாகவும், நிவாரணத் தொகையில் 25 சதவீதம் வரை கமிஷனாக பெற்ற பிறகே நிவாரணத்தொகை வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
 
எனவே அதிமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்து எவ்வித முறைகேடும் இல்லாமல், நிவாரண பணிகளும், உதவிகளும் வழங்கவேண்டும். நிவாரண பணிகளை கவனமுடன் செயல்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்